
நான் பார்க்கிறேன், தான் தோங்கிய அழகிய மரங்களை! நான் கோப கனலில் தத்தளித்த போது அதன் சாமரங்கள் எனைக் குளிரூட்டும்.
தனிமை எனை ஆட்கொள்ளும், கூட்டம் கூட்டமாய் என் தோட்டத்து மரங்களெல்லாம், எனை வாரி அணைத்து சொந்தம் கொண்டாடும்!
உறவு தாகத்தின் உச்சம், என் சித்தப்பன் பூவரசமரம் , என் பெரியப்பன் ஆலமரம், என் சகோதரன் வேலமரம் என் தாத்தன் வேப்பமரம், இப்படி உறவாடி மகிழ்வேன்!
அமைதியின் பனிமலையாய், அக்னியின் எரிமலையாய் எனக்கு வாழ்க்கை பரிட்சயம் மரங்களின் இயல்பு நிலை தான்!
வா!, ஆனந்தம் வெளியே காத்திருக்கிறது என இசைத்திடும் - அதிகாலை சிட்டுகளின் மெட்டுகளில் என் சந்தோசங்கள் கரைந்துள்ளதை நான் உணர்கிறேன்!
மாலை காலமும் ஆலமரமும் பட்சிகளின் ஆரவாரத்தில் அமைதிகொள்ளுமே! என்னதான் பேசும்!?, அனுபவ பரிமாற்றமா?, பஞ்சாயத்து கூட்டமா?, காதல் மொழிகளா?

ஏன்!?, எனக்குமட்டும் இந்த ஏகாந்தம்! என் பிறப்பிடம் வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதால் எனக்கும் இயற்கைக்குமான ரசவாதம் மிகுதியோ!
மண்வாசனையை என் வாசனையாக கொண்ட காலங்களும் உண்டு!, மண்ணோடு புரண்டு மன அழுக்கை துடைத்துள்ளேன். சேற்றில் முளைத்த செந்தாமரைகளோடு சலசலப்பில் உட்பட்டதுண்டு!

நிலக்கடலை தோட்டங்களிலும் கேழ்வரகு சருகுகளிலும் என் மனதை தொலைத்துள்ளேன். நிர்வாகவியலின் ஏட்டில் என்னதான் உள்ளது!. நெற்கதிரருக்கும் இனத்தாரோடு பேசுவேன், ஆயிரம் நிர்வாகவியலின் தத்துவமும் பெறுவேன்!
ஆற்றங்கரை, மனதை பதித்துவைக்கும் கருவறை. என் இன்னொரு அன்னையாக இதுவரையில். பத்து திங்கள் மட்டுமே எனை சுமக்கவில்லை!. என் கண்ணீரை யாரும் பாராமல் அவள் வாங்கி கொண்டதுண்டு!
பச்சைக்கிளிகள், கனவு தேவதைகள். என் காதல் சுமந்த பாக்யசாளிகள். ஆலமரத்தடியில் எத்துனை காதல் மொழிகள் பேசினோம்! அவளின் சிரிப்பில் என்னுள் கோடி இன்பம் பிறக்கக் கண்டேன்!