Friday, 8 May 2009
"எனை மாற்றிய தோழமை"
அறிமுக போராட்டம் இளங்கலை பொறியியல் மூன்றாமாண்டு, தோழர்கள் ( அப்பொழுது எனக்கு தோழிகள் இல்லை ! ) அனைவரும் பெற்ற வேலைவாய்ப்பின் பெருமிதத்தாலும், பெறப்போகும் வேலை முனைப்பிலும் மூழ்கிய நேரமது. நெருங்கிய ஒரு தோழன் வழியாக நான் அறிந்த முதல் பெண்மை; பிற்காலத்தில என் அறியாமை இரவுகளின் வெண்மை. அக்காலத்தில் என்னுள் பெண்மைப்பற்றிய உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் , குறிப்பிடும் படியான அபிப்பிராயம் இருந்ததில்லை. அதன் விளைவு, நான் பெற்ற அந்த அறிமுகத்தை மெருகூட்ட தவறினேன். அனால் அப்பெண்மை தவறவில்லை போலும்!. என்னால் முடிந்தது, மின்னஞ்சல் வழியாக இந்த இளங்கலை நட்பை சிதையாமல் காத்துகொண்டது. ஒப்பந்தங்கள் நான் முதுகலைப்பயில வெளிநாடு செல்லும் முனைப்பில் இருந்தபோது , அப்பெண்மையின் நட்பு நான் அறியா எனை ஆட்கொண்டதில் ஆச்சர்யமில்லை!. சிறு சிறு கைப்பேசி குறு செய்திகளினாலும் கைப்பேசி அலைப்புகளினாலும் அப்பெண்மை எனை செதுக்க ஆரம்பித்ததை நான் அப்பொழுது உணரவில்லை. அதுவரை பெண்மையின் சிந்தனைகளுக்கு செவி தராதவன் , பிறகு மெல்ல இசைந்ததை நான் உணர்ந்தேன். எனக்குள்; எனைசூழ்ந்த பெண்மையைப்பற்றிய பிற்போக்கான எண்ணங்களை அப்புரபடுத்திய அப்பெண்மையின் முனைப்பை நான் என்பால் அவள் கொண்ட முதல் ஒப்பந்தம் என்பேன். வெறும் பயனற்ற பொழுதுபோக்கு சாரத்தை மட்டும் கொண்டதில்லை எங்கள் தோழமை பேச்சு, மாறாக எதிர்கால முன்னேற்றத்தை பற்றியும், எங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், அதிகமாக வாழ்கைக்கல்வியைப்பபற்றியும் இருக்கும். ஒரு பெண்மையிடம் கலந்துரையாட வேண்டிய பெருமைதகுந்த நாகரீகத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்த அந்த பெண்மையின் ஆதங்கத்தை நான் என்பால் அவள் கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் என்பேன். சொல்லபோனால், அப்பெண்மையின் நட்பை நான் அறிந்ததேன்னமோ இந்த ஜெர்மானிய மண்ணில் தான். அவ்வளவு சக்தி போல இம்மண்ணுக்கு!. என்னுடைய முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு செயல்களிலும் அவளின் சிந்தனைகள் எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்திருக்கும். நான் தடமாறிய போது அங்கே தடைகற்களாக இருக்கு பெண்மை , நான் சரியான வழியில் செல்லும் போது ஊக்கமளித்து பயண வேகத்தை கூட்டியதும் இப்பெண்மைதான். அத்தகைய மாற்றத்தை ஒரு பெண்மை என்னுள் ஏற்படுத்திய சாதுரியத்தை கண்டு நான் அதனை ஒப்பந்தம் என்றழைப்பது சரியே!. எனக்கு கிடைத்த இத்தகைய தோழமை, என் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் அவர்களை ஒரு நல்ல பெண்மையை தோழமையாக்க அறிவுருத்துவதுண்டு. என்னடா, இந்த நட்பு!, ஒரு சுவாரஷ்யம் இல்லை, ஒரு கலாட்டா இல்லை என் நீங்கள் எண்ணலாம். எங்கள் பேச்சை ஒட்டுகேட்டால் நீங்கள் ஒரு முழு நீல நகைச்சுவை திரைப்படமே எடுக்கலாம். என் தோழியின் நகைச்சுவை உணர்வை அளக்க அளவுகோலே இல்லை என்பேன். என் உள்ளார்ந்த மாற்றத்தை தவிர, என் போக்கிரித்தனமான நடை, உடை, பாவனைகளை மாற்றியதில் அவளுக்கும் பங்குண்டு. தன்னுடைய கைதேர்ந்த கலையால், என் வெளியார்ந்த மாற்றத்திற்கு வித்திட்டவளே அவள் தான். என் தோல்விகளே, என் வெற்றிகள் எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும்; அது கைபேசி மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, இல்லை நேரிலோ, அப்பெண்மையை வெறுப்பேத்த முயற்சி செய்து வெற்றிபெறுவதுண்டு. ஆனால் முடிவில் தோல்வி என்னமோ எனக்குதான். நான் பலமுறை என் நட்பை முறித்திக்கொள்ள முயற்சி செய்து பெற்ற தோல்விகளே என் வாழ்கையின் பல வெற்றிகளுக்கு காரணம். என் ஒவ்வொரு முயற்சியிம் போதும், இப்பெண்மையின் பங்களிப்பு என்னவோ " உனக்கு வேண்டுமானால் என் நட்பு தேவையில்லாமல் போகலாம், ஆனால் எனக்கு வேண்டும் " இதுவாகத்தான் இருக்கும். கடவுளின் படைப்பின் பெருமை இந்த பெண்மை போலும்!. இன்று மென்பொருள் சேவையில் முக்கிய பங்களிப்பில் இருக்கும் என் தோழியின் ஆண்மை ஆளுமை கண்டு நான் மிரண்டு போனதுண்டு. அவளிடம் நான் காத்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அவளுடைய வெற்றியாகட்டும் , தொல்வியாகட்டும் என்னிடம் பகிர்ந்துகொள்ள அவள் தவறியதில்லை. அந்த பங்களிப்பின் முடிவில், நான் கற்றுகொள்வது அவளின் அனுபவப்பாடங்கள். சொல்லபோனால், என்னுள், என்னால் இயலாத மாற்றத்தை அவள் செய்கிறாள். இத்தகைய பெண்மையை நான் என்னவென்று சொல்வது. இன்னொரு தோழன் விரைவில் திருமதியாக காத்திருக்கும் என் தோழி சொல்கிறாள், திருமணத்திற்கு பிறகு அவள் கணவன் என் தோழனாம். இதை எங்கள் ஒவ்வொரு கலந்துரையாடல் முடிவில் அவள் கூற தவறியதில்லை. எனக்கு சிறு வயதில் பாரதி பாடிய பாடல் ஞாபகம் வருகிறது " என்ன தவம் செய்தேன் இப்பெண்மையை என் தோழியாக பெற! " . ஒரு ஆண் முழுமை அடைவது என்பது ஒரு பெண்ணால் சுலபமாக முடியும். அப்பெண் தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், ஏன், சகோதரியாக கூட இருக்கலாம். நான் அதிர்ஷ்டசாலி , இவையெல்லாம் பெற்றும் , இதற்கும் மேலாக இக்கட்டுரையின் நாயகி ஒரு பெண்மையை என் தோழியாக பெற்றேன்!. வடிவேலு சொல்வது போல " நீ நல்லா இருமா!". இதை தவிர வேற சொல்ல எனக்கு தெரியவில்லை!!.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த தோழைமை பற்றி படிக்கும்போது ஒரு புதிய அனுபவமாக இருந்தது எனக்கு, பெண்களை பற்றி இப்படியும் சிந்தித்து அதற்கும் அருமையான வார்த்தைகளை சேர்த்து நன்றாக இருந்தது, அனைவரது வாழ்விலும் ஒரு பெண் இருந்த்ருப்பால் அந்த தோழாமைக்கு உண்மையாக இருக்கலாமே,,,
அழகான எழுத்துநடையில், மிக அருமையான பதிவு:)))
பெண் தோழமையை இத்துனை அழகாக விளக்கிட இயலுமா? என வியந்தேன்!
தொடர்ந்து எழுதுங்கள்....உங்கள் எழுத்துநடை மிக இயல்பாக உள்ளது, பாராட்டுக்கள்!
மிக்க நன்றி தோழியே!.
Post a Comment