Sunday, 7 June 2009

பெண்மையை ஆட்கொண்ட ஆண்மை



பூக்களின் நிறமாய்,
பனித்துளியின் தெளிவாய்,
மழையின் குளிராய்,
மாலையின் புன்னகையாய்,
மலையின் வாசமாய்,
இவை அனைத்திலும் மென்மையாய்
எட்டிப்பார்த்தது உன் ஆண்மை!


எங்கோ வாசித்தது!
முகம் தெரியா அந்த தோழிக்கு நன்றி!
.

Saturday, 6 June 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 1



யார் சொன்னது?, வெட்கம்
பெண்களுடையது!, அது
பெண்மையிடத்தது..

யார் சொன்னது?. பெண்மை
பெண்களுடையது!, அது
அவ்வபோது ஆண்மையிடத்தும்
விருந்தாளியாகும். கூடவே
வெட்கங்களை தாரைவார்க்கும்.

வெட்கம்,
பெண்மை பிறந்தவீடு!
ஆண்மை புகுந்தவீடு!

ஆண் வெட்கம்,
பூக்கள் என்பேன்.
கண்பாரா மலரும், கண்பாரா வாடும்!
பூக்காலம் போல வெட்ககாலமும் உண்டு!
பூ நிறம் போல வெட்க நிறமும் உண்டு!
பூவாசம் போல வெட்க வாசமும் உண்டு!

காலை தோன்றும்
சிலவெட்கங்கள்.
மாலை மட்டும் தோன்றும்
சிலவெட்கங்கள்.
ஆண் வெட்கம் காலம் சார்ந்தது!



வெட்கத்தைச் சுமந்த
ஆண் முகம், அது
அல்லி பூக்கள் கண்விழித்த
தாமரைக் குளம்.
ஆண் வெட்கம் நிறம் பூசியது!

தலைவி கேட்க
தலைவன் மறுக்க
சட்டைக்காலரின் அச்சுவை!
ஆண் வெட்கத்தின் மகரந்தச்சுவை.
ஆண் வெட்கம் சுவை சுமந்தது!

எத்துனை வெட்கங்கள்!
வகைப்படுத்தும்வரை பெண் தேசம் பொறாமை கொள்ளாமலும்,
ஆண் தேசம் புது வெட்கத்திற்கு பிறப்பு தராமலும்
இருக்கட்டும்,



பிரம்மச்சரியத்தின் கடைசி இரவு
தலைவி பகிர்ந்தது வெறும் பசும் பால்
தலைவன் பகிர்வது வெட்கம் கலந்த பால்
அவ்வெட்கம் பால் வெட்கம்!

கணித மேதையானாலும்
தலைவியின் முத்த எண்ணிக்கையில்
தலைவன் குறைத்திடும் அசட்டுத்தனம்
மதி வெட்கம்!



மழையின்றி உச்சந்தலையில்
மழை பெய்த்திடும் தலைவியின்
தொலைபேசி சிணுங்களில் பிறக்கும்
மழை வெட்கம்!

காதலியிடம் அறிமுகம் பேச
தன்வீட்டு குழந்தைகளிடம் முன்னோட்டம்
பார்க்கும் அந்த தோரணை
மழலை வெட்கம்!



யாருமில்லா இடத்தில்
தொடுதல் இல்லா பேச்சில்
காதலன் கால்கள் மட்டும் தரையோடு
தொட்டு இடும் கோலங்கள்
கோலவெட்கம்!

வெட்கங்கள் தொடரும்!!

Friday, 5 June 2009

திரு. கவுண்டமணி என்ற ஆசான்


திரு. கவுண்டமணி என்ற ஆசான்

சினிமாவை ஒலிசித்திர வடிவில் ரசித்த அந்த காலத்தின் முதலே, நான் திரு. கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை வசனங்கள் மற்றும் நடிப்புக்கு இவ்வுலகை மறந்தவன். தொடக்கம் என்னவோ நகைச்சுவை பொருட்டாக இருந்தாலும், பின்னாளில் அவைகள் என் வாழ்க்கைகல்வி எழுச்சிபெற பெரிதும் உதவின. அந்த கந்தர்வ குரலால், குசும்பையும் நக்கல் நய்யாண்டியையும் திறம்பட கலந்து, வெள்ளித்திரையில் நகைச்சுவை விருந்தே படைப்பார். அத்தகைய விருந்தில் ஆங்காங்கே சமுதாயத்திற்கான கருத்துகள் மிகுந்தே இருக்கும். ஒரு படைப்பாளியின் வெற்றி அவன் கருத்துகளினால் அறியபடுவதில்லை மாறாக அவை எத்தனை வீரியத்துடன் மக்களை சென்றடைகிறதோ அதனூடே அறியப்படும். அத்தகைய வழியில் எம் குல நடிகர், ஒரு படைப்பாளி.

அவர் நடிகரென்றால் வெறும் ஊடகம் தானே, அவரை இயக்கியவன் விடுத்து இவரை மிகைபடுத்துவது நல்லதா?, ஐயம் ஏற்படும்!. நான் சொல்வேன், கண்டிப்பாக இல்லை. அரிசி, உப்பு, புளி யாரோ எங்கோ விளைவித்தாலும், அதை வாங்கி பக்குவமாக தன் பிள்ளைகளுக்கு சமைத்து போடும் என் அன்னை தான் எமக்கு மிகைமை. எத்துனை திரைப்பட எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அவர் பின்னால் இருந்தாலும், எனக்கு அவற்றை சாரம் குறையாமல் நான் ரசிக்கும்படி எனக்களித்தவர் கவுண்டர் தான் மிகைமை. அத்தகைய பங்களிப்பில் குறிப்பிடும்படியான சிலவற்றை பதிவதில் எனக்கு சுயநலமும் உண்டு. உங்கள் புண்ணியத்தில் நானும் இன்னொரு முறை ரசிக்கிறேன்.



அமெரிக்க, ஜெர்மானிய மற்றும் ஜப்பானியத்தை பற்றி நான் பரிட்சியமானதே இவரின் வசனங்களால் தான். நிறைய திரைபடங்களில் இத்தகைய வளர்ந்த நாடுகளின் முன்னேற்ற உக்திகளை தன் நகைச்சுவை வசனவாயிலாக பறை சாற்றுவார். இன்று பலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட சுயதொழில் வெற்றி ரகசியமும் இவரின் நகைச்சுவையில் உண்டு. ஒருவன் தொழில் தொடங்கும்போது , ஒரு தொழில் செய்யவேண்டும் , பல தொழில் செய்தால் தோல்வி அதிகமென்று சொன்ன இவரின் படைப்பு, சிரித்து சிந்திக்க வைத்தது!.




அரசியல்வாதிகளின் பந்தா பேர்வளிதனத்தை மேடை ஏற்றியவர் இவர் தான். காதல், வெட்கம், இவற்றை நகைச்சுவையாக சத்யராஜ் மற்றும் மணிவன்னுடன் கைகோர்த்து செய்த ஆர்ப்பாட்டங்கள் ஏராளம்!.


ஆசானின் சிந்தனைகள் என்றைக்குமே பத்து ஆண்டுகள் முன்னோக்கியே பயணப்படும் இயல்புடையது!.

இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம், இதோடு இந்த பதிவின் முதல் பகுதியை முடிக்கிறேன்.

அ ஆ இ ...


'அ' என்றேன், நான் அழகா என்றாய்!
'ஆ' என்றேன், உனக்கு ஆசையா என்றாய்!
'இ' என்றேன், இதழ் இனிப்பா என்றாய்!
'ஈ' என்றேன், உனக்கு ஈர்ப்பா என்றாய்!
'உ' என்றேன், உயிராய் என்றாய்!
'ஊ' என்றேன், ஊடலாய் என்றாய்!
'எ' என்றாய், எட்டி பிடிக்கவா என்றேன்!
'ஏ' என்றேன், ஏகாந்தம் உனக்கு என்றாய்!
'ஐ' என்றேன், ஐயம் என்றாய்!
'ஒ' என்றாய், நாம் ஒருமை என்றேன்!
'ஓ' என்றேன், ஓசையின்றி என்றாய்!
'ஔ' என்றாய், மௌனம் காத்தேன்!
'ஃ' என்றேன், அஃது இனிதே என்றாய்!!.


தமிழ் புரிந்தாய், காதல் பகிர்ந்தாய்.
காதல்
ஒரு பரிமாணத்தில் புரிதலின் பகிர்வாகும்.
அன்று
உலகம் காதல் நிறம் பெறும்!.

Monday, 1 June 2009

ஒரு டம்ளர் இரத்தம் ஒரு துளி தண்ணீர்


கல்யாண பந்தல்கால் குழியில் சுரப்பாய்,
என் பாட்டி சொல்ல நான் கேட்டேன். 
ஆயிரம் அடி ஆழ்குலாயில் சுரக்க மறுப்பாய்,
என் பேத்தி சொல்ல நான் கேட்பேனோ - ஐயோ!!

நீர்நிலை நாடி, தோழர்கள் பதுங்க,
நான் புடிக்க, அனுபவித்த அந்த குளியல்,
ஒரு குவளை தண்ணீரில் காக்கா குளியலாய், 
என் பேரன் பெருவானோ - ஐயோ!!

நீச்சல், நீர்பந்து, மூச்சடைத்தல், வாழைமர சவாரி
இவை என்னவென்று என் பேரன் ஏட்டில் படித்து,
தேர்வில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி, 
நான் அறிவேனோ - ஐயோ!!

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு 
அழியா பழமொழி அதன் சாவை 
எதிர்நோக்கி உள்ளதா? - ஐயோ!! 

நேற்று ஆபரனபொருள், 
இன்று உணவுப்பொருள் போல நாளை தண்ணீரும் , 
ஏற்றுமதி இறக்குமதி வியாபார பொருள் ஆகிவிடுவோமா? - ஐயோ!!

இத்தகைய நிலைக்கு காரண பிசாசை கழுத்தை நெருக்காவிடில், இது அத்துனையும் சாத்தியம் தான். கூடுதலாக இதுவும் சாத்தியம். 
"ஒரு துளி தண்ணீருக்கு ஒரு டம்ளர் இரத்தம் சிந்த வேண்டிருக்கும்".

"பெண்களும் பொங்கலும்"




அந்த காலங்கள் , சூரிய மென் கதிர்களோடு , பழுத்த நெற்கதிர்கள் ஆனந்த கூத்தாடும் புதுமை காலங்கள் என்மனதில் பதிந்திட்ட பசுமை புரட்சி. பொதுவாக வகையுறா உருவகத்தோடு ஒப்பிட்டு கவிதை எழுதுவதில் ஆனந்தம் கோடி எனக்கு. அதன் வழியில்,


தேனோடு சர்க்கரை கலந்திட்டு,
பசுநெய்யோடு பருக்கை அமிழ்ந்திட்டு,
பொங்குமே! என் நாவில் எச்சிலும் கூண்டோடு பொங்குமே!!

வள்ளுவன் இருவரியில் சங்கமித்த கருத்தாய்,
பொங்குமே! அவள் தேன்வாயில் ஊற்றாய் பொங்குமே!!

தலைவாய் திறந்து, இடையிலே மெலிந்து, கடையே குவிழ்ந்து,
மெய்யே பல மை தீட்டிய ஓவிய ஆடை அணிந்து,
நீயும் ஆனாய் , சுவை சேமிக்கும் பொங்கலாழியாய்!!

தலை தொடங்கி, இடை அணைத்து கடை நெருங்கும் மஞ்சள் இஞ்சியும்,
அழகு அது, திருவிளையாடல் ஆடிய என் குல பெண்டிரின் கூந்தல் அது!!

நீவிர் இருவரும் பொங்கும் நேரம், உற்றோரின் சந்தோச நேரம்!!

Top Tamil Blogs by Tamilers