Thursday, 1 October 2009

ஒரு பதில்

தவம், கடவுள், பக்தி, இவைகானும் அனுபவம் எனக்கில்லை
ஆராயும் நுண்ணறிவும் இல்லை!

என் அனுபவம், மக்களும் மாக்களுமே!
யாம் அறிந்தது அவைகளிடத்து அன்பு செய்தல்!

வாடிய பயிரை காணும்போதெல்லாம் தானும் வாடிய என் பாட்டன் வள்ளலார்
சமூகத்தை சார்ந்தவன் நான்! - அன்பு செய்தலை தவிர வேறன்ன பேரானந்தம் எனக்கு!

சொல் நண்பா!?,

பறவைகளை நேசிக்கிறேன், அவைகளோடு சண்டை போடுவதே எனக்கு பேரானந்தம்!
ஆம், மாலைவேளைகளில் அவைகளோடு பேச்சு யுத்தம், வந்து பார் நண்பா, எங்கள் ஊர் கோவில் ஆலமரத்துக்கு!

மரங்களோடு இனைந்து, கொடிகளோடு சாய்ந்து, பயிர்களோடு பயின்று தென்றலோடு உலா வருவதில் எத்துனை சுகம்!.

ஆற்றங்கரயில அப்டி என்னதான் இருக்கோ!?, என் அன்னையின் சுப்ரபாதம் அது!
அவளுக்கும் தெரியும் மனிதனை ஆனந்தமாக்கும் மந்திரம் அங்குள்ளது!!

மண்வாசனை, இந்த சொல்லே போதுமே, ஆயிரம் நினைவுகள் கண்திரையில் வருமே!
புழுதி, என் இனத்தின் நிறம் அது, எங்கள் ஆனந்தங்களை பரப்பும் ஊடகம்!

இவை தவிர வேறன்ன வேண்டும் நண்பா, இவைகளே எனக்கு கடவுளை விட பெரிது!
யாம் விரும்பவதெல்லாம், எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே!.

Sunday, 13 September 2009

அஃறிணை மேல் என் காதல்



நான் பார்க்கிறேன், தான் தோங்கிய அழகிய மரங்களை! நான் கோப கனலில் தத்தளித்த போது அதன் சாமரங்கள் எனைக் குளிரூட்டும்.

தனிமை எனை ஆட்கொள்ளும், கூட்டம் கூட்டமாய் என் தோட்டத்து மரங்களெல்லாம், எனை வாரி அணைத்து சொந்தம் கொண்டாடும்!

உறவு தாகத்தின் உச்சம், என் சித்தப்பன் பூவரசமரம் , என் பெரியப்பன் ஆலமரம், என் சகோதரன் வேலமரம் என் தாத்தன் வேப்பமரம், இப்படி உறவாடி மகிழ்வேன்!

அமைதியின் பனிமலையாய், அக்னியின் எரிமலையாய் எனக்கு வாழ்க்கை பரிட்சயம் மரங்களின் இயல்பு நிலை தான்!

வா!, ஆனந்தம் வெளியே காத்திருக்கிறது என இசைத்திடும் - அதிகாலை சிட்டுகளின் மெட்டுகளில் என் சந்தோசங்கள் கரைந்துள்ளதை நான் உணர்கிறேன்!

மாலை காலமும் ஆலமரமும் பட்சிகளின் ஆரவாரத்தில் அமைதிகொள்ளுமே! என்னதான் பேசும்!?, அனுபவ பரிமாற்றமா?, பஞ்சாயத்து கூட்டமா?, காதல் மொழிகளா?



ஏன்!?, எனக்குமட்டும் இந்த ஏகாந்தம்! என் பிறப்பிடம் வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதால் எனக்கும் இயற்கைக்குமான ரசவாதம் மிகுதியோ!

மண்வாசனையை என் வாசனையாக கொண்ட காலங்களும் உண்டு!, மண்ணோடு புரண்டு மன அழுக்கை துடைத்துள்ளேன். சேற்றில் முளைத்த செந்தாமரைகளோடு சலசலப்பில் உட்பட்டதுண்டு!



நிலக்கடலை தோட்டங்களிலும் கேழ்வரகு சருகுகளிலும் என் மனதை தொலைத்துள்ளேன். நிர்வாகவியலின் ஏட்டில் என்னதான் உள்ளது!. நெற்கதிரருக்கும் இனத்தாரோடு பேசுவேன், ஆயிரம் நிர்வாகவியலின் தத்துவமும் பெறுவேன்!

ஆற்றங்கரை, மனதை பதித்துவைக்கும் கருவறை. என் இன்னொரு அன்னையாக இதுவரையில். பத்து திங்கள் மட்டுமே எனை சுமக்கவில்லை!. என் கண்ணீரை யாரும் பாராமல் அவள் வாங்கி கொண்டதுண்டு!

பச்சைக்கிளிகள், கனவு தேவதைகள். என் காதல் சுமந்த பாக்யசாளிகள். ஆலமரத்தடியில் எத்துனை காதல் மொழிகள் பேசினோம்! அவளின் சிரிப்பில் என்னுள் கோடி இன்பம் பிறக்கக் கண்டேன்!

Thursday, 13 August 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 2



மாலை நேரங்கள், அலுவல்களை அணைத்துவிட்டு,
தலைவன் தாமதமாய், தலைவி எரிமலையாய்,
சிரிப்பான், சமாளிப்பான், அணைப்பான்!
அது தாமத வெட்கங்கள்!


தலைவி பேரழகியானாலும்,
சுற்றத்து குமரிகளை நோட்டமிட்டு,
தலைவியிடம் அசடுவளியும் தலைவனிடத்து,
வாலிப வெட்கம்!

தன்பாதியின் சுற்றத்தை பரிகாசித்து,
தன்சுற்றத்தை புகழ்ந்து பேசி,
தலைவியிடத்து சம்பாதிக்கும் கோபம்
ஏகாந்த வெட்கம்!



ஆயிரம் பேரை ஆளுமை செய்தாலும்,
தலைவியின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு,
அவ்வபோது அவள் சொல் கேட்கும்,
ஆசை வெட்கம்!

தலைவியின் பிறந்த வீடு,
அங்கு செல்வதே அரிது, சென்றாலும்,
மதியாமல் திரிந்து, ஏளனம் செய்வது,
மாப்பிளைமுறுக்கு வெட்கம்!



வருவான், போவான், வழக்கம் போல் பேசுவான்,
ஒரு நாள் தலைவி அறியா வியப்புதனை
அவளுக்கே பரிசளித்து, புதிதாய் தனையாக்கும்
திடீர் வெட்கம்!

Tuesday, 4 August 2009

அனுமதியும் வரமும்

நீ அனுமதித்தால், நான்
நீ பருகும் நீராய் கடவுளிடம் வரம் கேட்பேன்!
உன் வெண்ணிற பற்களிடையே ஒட்டி உறவாடும் அந்த பயணித்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
நீ பூசும் உதட்டு சாயமாக வரம் கேட்பேன்!
உன் செந்நிற இதழ்களிடையே தஞ்சம்புகும் அந்த தருணத்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன்னை பிரதிபலிக்கும் முககண்ணாடியாய் வரம் கேட்பேன்!
உன் நிறம் மாறா முகபிம்பத்தில் நகையாடும் அந்த சினுங்களுக்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் வருகையை பறையும் கால் கொலுசுகலாய் வரம் கேட்பேன்!
உன் அந்தத்தை அறிந்துகொள்ளும் அந்த வாய்ப்பிற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் நெற்றிப்பொட்டின் குங்குமமாய் வரம் கேட்பேன்!
உன் இருபுருவ சாமரங்கள் வீசும் அந்த தென்றலுக்காக.

அனுமதியும் வரமும் தொடரும்..,

Monday, 3 August 2009

தவமின்றி வரம் கிடைக்குமா?

கடும்தவம் புரிவார்
உலகின்பம் துறவார்!
ஞான ஒளி பெற்று, பேரின்பம் அடைவார்!.

வியந்தேன்,

என்ன தவம் புரிந்தேன்!
உலகின்பம் மறந்தேன்!
கடை இரு விழியால் பேரின்பம் அடைந்தேன்!

ஒரு இரவில் கூடுவார்!
பத்துத்திங்கள் காப்பார்!
புதியதோர் உயிர்க்கு பிறப்புதனை பரிசளிப்பார்!

வியந்தேன்,

ஒரு நாழிகை கண்டேன்!
மறு நாழிகை நினைந்தேன்!
புதியவன் என் பிறப்புதனை எனக்கே பரிசளித்தேன்!

பகவத்கீதை அறிந்தேன்!
எதனையும் கொண்டுவரவில்லை!
எதனையும் விட்டு போவதில்லை!
எதனையும் எடுத்து செல்வதில்லை!

வியந்தேன்,

உன் அழகினை கொண்டுவந்தாய்!
அதன் சுவடுகளை விட்டு சென்றாய்!
என் நினைவுதனை எடுத்து சென்றாய்!
யாரடி நீ?.
புதிய காதல்கீதை அருளும் பெண்பால் கிருஷ்ணனா?

Friday, 17 July 2009

Deja Vu

It was late evening, am sure that it was Friday. I had a casual walk towards the Main Road and met a smart guy. I still remember, he wore Blue T-shirt and the text was name of foriegn University. Hey!, young man, enna padikarappa?, he askd. I replied, naan 8th padikiren neengha?. He replied casually, MS in States. In d mean time, he opened his purse, there was somethng like card. Once i askd him, he told its somthng so called Credit card. Apdina enna?, he simply said, panam thevaye illa ithu pothum.

At that time, i decided, i will do MS in any of the foriegn country. And i did in Deutschland. I thank him

Der was a cultural function in Annamalai University for BE students and my Brother was asking me to come along as he was doing BE. I went there with him, and had talk with his friends. Notably, der was a guy named Arul ( still i remember the name :)), he was simply smart in luk. Anna, anna, yaaruna avaru, avan en friendu da, Neyveli paya, Computer Science padikuraan adhaan sceana poduraan!, he replied.

Askd myself, am i able to be like dat one day?, finished my BE in Computer science. I thank him.

Today, my Boss, he is smart either, gave me a wonderful ride to my Home. I often say to him, u r d Master and i would like to be ur Master piece, he replies, sure i l make u. He recruited me, he is teaching me d life - d work - d world of people and ofocurse he is my Mentor. Today he inspired a wonderful thing, the Deja Vu continues.

Can i make it?. Sure prabhu, u r gonna thank him.

Tuesday, 7 July 2009

"ரகசியம் சொன்னாள்"

இரு ஜோடி இமை மூடி,
ஒரு ஜோடி இதழ் திறவாமல்,
முடிவுரை தொடா ரகசியம் சொன்னாள்.

முன்னுரையாய் -

பிசாசு, எருமை, போக்கிரி, பொய்யான்,
போடா, அழகன், செல்லம், காதலன், புருஷன் என வசைபாடினாள்!.

பொருளுரையாய் -

தண்ணிக்குடத்தில் தலைநீட்டி பார்த்தேனாம்
வெட்கப்படுகையில் வேடிக்கை பார்த்தேனாம்
அம்மா திட்டலை ரசிக்கும் ரசவாதமாய் என் முகமாம்
எதையும் ருசித்து சாப்பிடும் சுவையானேனாம்
யாவையும் ரசிக்கும் ரசிப்பை பரிசளித்தேனாம்

துயில் எழுகையில் தூணோரமாய்!
நடைபாதையில் கருவேலம் பூக்களாய்!
அவள் வீட்டுக்குள் மருமகனாய்!
தன் வாழ்க்கை தமிழுக்கு இலக்கணமாய்!
முத்தாய், கணவனாய் எனை
கேட்டாள்!

என்னுள் துடித்த இதயம் இசைத்தது
கருப்பு வெள்ளை என் கண்கள் அவள் நிறம் பூசியது

மாம்பூவின் வாசம்,
இலுப்பைக்காயின் இனிப்பு,
தரைதொட்ட வெள்ளரியின் துவர்ப்பு,
அம்மாவின் அழுக்கு புடவைச்சுவை,
பாட்டி கிள்ளிய வெற்றிலை காம்பு,
செட்டியார்கடையின் கமர்கட்டு,
இவை அனைத்தும் என் நினைவுகளில் - உன்னால் மறுபடியும்.

முடிவுரை என்றெண்ணி அருகே வா என்றேன்
மிக அருகே வந்தாய்! முன்னுரை எழுதலானேன்.

Sunday, 7 June 2009

பெண்மையை ஆட்கொண்ட ஆண்மை



பூக்களின் நிறமாய்,
பனித்துளியின் தெளிவாய்,
மழையின் குளிராய்,
மாலையின் புன்னகையாய்,
மலையின் வாசமாய்,
இவை அனைத்திலும் மென்மையாய்
எட்டிப்பார்த்தது உன் ஆண்மை!


எங்கோ வாசித்தது!
முகம் தெரியா அந்த தோழிக்கு நன்றி!
.

Saturday, 6 June 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 1



யார் சொன்னது?, வெட்கம்
பெண்களுடையது!, அது
பெண்மையிடத்தது..

யார் சொன்னது?. பெண்மை
பெண்களுடையது!, அது
அவ்வபோது ஆண்மையிடத்தும்
விருந்தாளியாகும். கூடவே
வெட்கங்களை தாரைவார்க்கும்.

வெட்கம்,
பெண்மை பிறந்தவீடு!
ஆண்மை புகுந்தவீடு!

ஆண் வெட்கம்,
பூக்கள் என்பேன்.
கண்பாரா மலரும், கண்பாரா வாடும்!
பூக்காலம் போல வெட்ககாலமும் உண்டு!
பூ நிறம் போல வெட்க நிறமும் உண்டு!
பூவாசம் போல வெட்க வாசமும் உண்டு!

காலை தோன்றும்
சிலவெட்கங்கள்.
மாலை மட்டும் தோன்றும்
சிலவெட்கங்கள்.
ஆண் வெட்கம் காலம் சார்ந்தது!



வெட்கத்தைச் சுமந்த
ஆண் முகம், அது
அல்லி பூக்கள் கண்விழித்த
தாமரைக் குளம்.
ஆண் வெட்கம் நிறம் பூசியது!

தலைவி கேட்க
தலைவன் மறுக்க
சட்டைக்காலரின் அச்சுவை!
ஆண் வெட்கத்தின் மகரந்தச்சுவை.
ஆண் வெட்கம் சுவை சுமந்தது!

எத்துனை வெட்கங்கள்!
வகைப்படுத்தும்வரை பெண் தேசம் பொறாமை கொள்ளாமலும்,
ஆண் தேசம் புது வெட்கத்திற்கு பிறப்பு தராமலும்
இருக்கட்டும்,



பிரம்மச்சரியத்தின் கடைசி இரவு
தலைவி பகிர்ந்தது வெறும் பசும் பால்
தலைவன் பகிர்வது வெட்கம் கலந்த பால்
அவ்வெட்கம் பால் வெட்கம்!

கணித மேதையானாலும்
தலைவியின் முத்த எண்ணிக்கையில்
தலைவன் குறைத்திடும் அசட்டுத்தனம்
மதி வெட்கம்!



மழையின்றி உச்சந்தலையில்
மழை பெய்த்திடும் தலைவியின்
தொலைபேசி சிணுங்களில் பிறக்கும்
மழை வெட்கம்!

காதலியிடம் அறிமுகம் பேச
தன்வீட்டு குழந்தைகளிடம் முன்னோட்டம்
பார்க்கும் அந்த தோரணை
மழலை வெட்கம்!



யாருமில்லா இடத்தில்
தொடுதல் இல்லா பேச்சில்
காதலன் கால்கள் மட்டும் தரையோடு
தொட்டு இடும் கோலங்கள்
கோலவெட்கம்!

வெட்கங்கள் தொடரும்!!

Friday, 5 June 2009

திரு. கவுண்டமணி என்ற ஆசான்


திரு. கவுண்டமணி என்ற ஆசான்

சினிமாவை ஒலிசித்திர வடிவில் ரசித்த அந்த காலத்தின் முதலே, நான் திரு. கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை வசனங்கள் மற்றும் நடிப்புக்கு இவ்வுலகை மறந்தவன். தொடக்கம் என்னவோ நகைச்சுவை பொருட்டாக இருந்தாலும், பின்னாளில் அவைகள் என் வாழ்க்கைகல்வி எழுச்சிபெற பெரிதும் உதவின. அந்த கந்தர்வ குரலால், குசும்பையும் நக்கல் நய்யாண்டியையும் திறம்பட கலந்து, வெள்ளித்திரையில் நகைச்சுவை விருந்தே படைப்பார். அத்தகைய விருந்தில் ஆங்காங்கே சமுதாயத்திற்கான கருத்துகள் மிகுந்தே இருக்கும். ஒரு படைப்பாளியின் வெற்றி அவன் கருத்துகளினால் அறியபடுவதில்லை மாறாக அவை எத்தனை வீரியத்துடன் மக்களை சென்றடைகிறதோ அதனூடே அறியப்படும். அத்தகைய வழியில் எம் குல நடிகர், ஒரு படைப்பாளி.

அவர் நடிகரென்றால் வெறும் ஊடகம் தானே, அவரை இயக்கியவன் விடுத்து இவரை மிகைபடுத்துவது நல்லதா?, ஐயம் ஏற்படும்!. நான் சொல்வேன், கண்டிப்பாக இல்லை. அரிசி, உப்பு, புளி யாரோ எங்கோ விளைவித்தாலும், அதை வாங்கி பக்குவமாக தன் பிள்ளைகளுக்கு சமைத்து போடும் என் அன்னை தான் எமக்கு மிகைமை. எத்துனை திரைப்பட எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அவர் பின்னால் இருந்தாலும், எனக்கு அவற்றை சாரம் குறையாமல் நான் ரசிக்கும்படி எனக்களித்தவர் கவுண்டர் தான் மிகைமை. அத்தகைய பங்களிப்பில் குறிப்பிடும்படியான சிலவற்றை பதிவதில் எனக்கு சுயநலமும் உண்டு. உங்கள் புண்ணியத்தில் நானும் இன்னொரு முறை ரசிக்கிறேன்.



அமெரிக்க, ஜெர்மானிய மற்றும் ஜப்பானியத்தை பற்றி நான் பரிட்சியமானதே இவரின் வசனங்களால் தான். நிறைய திரைபடங்களில் இத்தகைய வளர்ந்த நாடுகளின் முன்னேற்ற உக்திகளை தன் நகைச்சுவை வசனவாயிலாக பறை சாற்றுவார். இன்று பலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட சுயதொழில் வெற்றி ரகசியமும் இவரின் நகைச்சுவையில் உண்டு. ஒருவன் தொழில் தொடங்கும்போது , ஒரு தொழில் செய்யவேண்டும் , பல தொழில் செய்தால் தோல்வி அதிகமென்று சொன்ன இவரின் படைப்பு, சிரித்து சிந்திக்க வைத்தது!.




அரசியல்வாதிகளின் பந்தா பேர்வளிதனத்தை மேடை ஏற்றியவர் இவர் தான். காதல், வெட்கம், இவற்றை நகைச்சுவையாக சத்யராஜ் மற்றும் மணிவன்னுடன் கைகோர்த்து செய்த ஆர்ப்பாட்டங்கள் ஏராளம்!.


ஆசானின் சிந்தனைகள் என்றைக்குமே பத்து ஆண்டுகள் முன்னோக்கியே பயணப்படும் இயல்புடையது!.

இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம், இதோடு இந்த பதிவின் முதல் பகுதியை முடிக்கிறேன்.

அ ஆ இ ...


'அ' என்றேன், நான் அழகா என்றாய்!
'ஆ' என்றேன், உனக்கு ஆசையா என்றாய்!
'இ' என்றேன், இதழ் இனிப்பா என்றாய்!
'ஈ' என்றேன், உனக்கு ஈர்ப்பா என்றாய்!
'உ' என்றேன், உயிராய் என்றாய்!
'ஊ' என்றேன், ஊடலாய் என்றாய்!
'எ' என்றாய், எட்டி பிடிக்கவா என்றேன்!
'ஏ' என்றேன், ஏகாந்தம் உனக்கு என்றாய்!
'ஐ' என்றேன், ஐயம் என்றாய்!
'ஒ' என்றாய், நாம் ஒருமை என்றேன்!
'ஓ' என்றேன், ஓசையின்றி என்றாய்!
'ஔ' என்றாய், மௌனம் காத்தேன்!
'ஃ' என்றேன், அஃது இனிதே என்றாய்!!.


தமிழ் புரிந்தாய், காதல் பகிர்ந்தாய்.
காதல்
ஒரு பரிமாணத்தில் புரிதலின் பகிர்வாகும்.
அன்று
உலகம் காதல் நிறம் பெறும்!.

Monday, 1 June 2009

ஒரு டம்ளர் இரத்தம் ஒரு துளி தண்ணீர்


கல்யாண பந்தல்கால் குழியில் சுரப்பாய்,
என் பாட்டி சொல்ல நான் கேட்டேன். 
ஆயிரம் அடி ஆழ்குலாயில் சுரக்க மறுப்பாய்,
என் பேத்தி சொல்ல நான் கேட்பேனோ - ஐயோ!!

நீர்நிலை நாடி, தோழர்கள் பதுங்க,
நான் புடிக்க, அனுபவித்த அந்த குளியல்,
ஒரு குவளை தண்ணீரில் காக்கா குளியலாய், 
என் பேரன் பெருவானோ - ஐயோ!!

நீச்சல், நீர்பந்து, மூச்சடைத்தல், வாழைமர சவாரி
இவை என்னவென்று என் பேரன் ஏட்டில் படித்து,
தேர்வில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி, 
நான் அறிவேனோ - ஐயோ!!

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு 
அழியா பழமொழி அதன் சாவை 
எதிர்நோக்கி உள்ளதா? - ஐயோ!! 

நேற்று ஆபரனபொருள், 
இன்று உணவுப்பொருள் போல நாளை தண்ணீரும் , 
ஏற்றுமதி இறக்குமதி வியாபார பொருள் ஆகிவிடுவோமா? - ஐயோ!!

இத்தகைய நிலைக்கு காரண பிசாசை கழுத்தை நெருக்காவிடில், இது அத்துனையும் சாத்தியம் தான். கூடுதலாக இதுவும் சாத்தியம். 
"ஒரு துளி தண்ணீருக்கு ஒரு டம்ளர் இரத்தம் சிந்த வேண்டிருக்கும்".

"பெண்களும் பொங்கலும்"




அந்த காலங்கள் , சூரிய மென் கதிர்களோடு , பழுத்த நெற்கதிர்கள் ஆனந்த கூத்தாடும் புதுமை காலங்கள் என்மனதில் பதிந்திட்ட பசுமை புரட்சி. பொதுவாக வகையுறா உருவகத்தோடு ஒப்பிட்டு கவிதை எழுதுவதில் ஆனந்தம் கோடி எனக்கு. அதன் வழியில்,


தேனோடு சர்க்கரை கலந்திட்டு,
பசுநெய்யோடு பருக்கை அமிழ்ந்திட்டு,
பொங்குமே! என் நாவில் எச்சிலும் கூண்டோடு பொங்குமே!!

வள்ளுவன் இருவரியில் சங்கமித்த கருத்தாய்,
பொங்குமே! அவள் தேன்வாயில் ஊற்றாய் பொங்குமே!!

தலைவாய் திறந்து, இடையிலே மெலிந்து, கடையே குவிழ்ந்து,
மெய்யே பல மை தீட்டிய ஓவிய ஆடை அணிந்து,
நீயும் ஆனாய் , சுவை சேமிக்கும் பொங்கலாழியாய்!!

தலை தொடங்கி, இடை அணைத்து கடை நெருங்கும் மஞ்சள் இஞ்சியும்,
அழகு அது, திருவிளையாடல் ஆடிய என் குல பெண்டிரின் கூந்தல் அது!!

நீவிர் இருவரும் பொங்கும் நேரம், உற்றோரின் சந்தோச நேரம்!!

Saturday, 23 May 2009

காதல் அப்டினா?



காவியமா?
- மறுத்த காலத்தில், துல்லியமாக திடமாக பயமின்றி ஒப்புகொண்டதால், ஏறக்குறைய சொர்க்கத்தில் ஒன்றாய் போனதால் அது சரித்திர சம்பவமானது!. பிற்காலத்தில் வேலை வெட்டி இல்லாத சிலர் , உட்கார்ந்து மிகைப்படுத்தி ஏட்டில் ஏற்றியதால் , அந்த காகிதகொத்து இன்று காவியமா?, என் மனம் மறுக்கிறது!. தெய்வீகமா? - தெய்வங்களே , நிபந்தனைகளுக்கும் வாதத்திற்கும் உட்படுத்த படுவதால் காதல் எப்படி இதனோடு கைகோர்க்கும்?. ஒரு வேலை கண்களுக்கு புலபடாததால், உணர்வுகளால் உணரபடுவதால் அது தெய்வீகமா?, இருக்காது!!. ஏனெனில் பக்தி இலக்கணம் பாழ்படும். ஆங்கே பக்தன் யாசிக்கிறான்!, இங்கே காதலன் உரிமை கோர்கிறான்!.
புனிதமா? - எனை பொறுத்தவரை புனிதம் எனப்படுவது, புதுமைகளால் மேருகேற்றபடுவது. மாறாக காதல் இங்கே மெருகேரியதைவிட சிதைக்கபட்டதே அதிகம் என்பேன்!! பின் எவ்வாறு அதை புனிதம் எனலாம்!!, இல்லை!!!
உணர்வுதொகுப்பா? - கண்டிப்பாக இருக்க இயலாது. ஏனெனில் ஒரு உணர்வு மனிதனை ஆட்கொள்ளுமே தவிர அடிமை செய்யாது. ஆக சிறந்த உணர்விடம் மனிதன் எக்காலத்திலும் அடிமை ஆவதில்லை, இங்கே காதல் மனிதனை அடிமை ஆக்குகிறதே!, எத்துனை காதல் தோல்விகள்!( காதல் தோற்பதில்லை, காதலர்கள் தோற்கிறார்கள், அட போங்கையா கொய்யால, காதலர்கள் இல்லையெனில் ஏதையா காதல்?), காதல் மரணங்கள்!!?, ஆக உணர்வுதொகுப்பும் இல்லை!. டேய் பிரபு , பின்ன என்னதாண்டா அது? சொல்லவில்லை என்றால் நீ காதலிக்கும்படி சாபம் தருவார்கள் வாசகர்கள்!!, வேண்டாம் விபரீதம் சொல்லிவிடுகிறேன்!!!
உடல் சார்ந்த , உள்ளம் மகிழ உயிர்தொன்றி இயற்கை காரணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வேதிவினை. ஹார்மோன்களின் திட்டமிட்ட சதி அது!!
புரியிதா பா?.. நல்லா கேக்குறாங்கய்யா Detailluuuu !!!!

நண்பன் என்ற போர்வையில் உள்ள ஒரு உயிரை பற்றி!!



இன்னாடா சந்திரா, இன்னா பண்ண போற?. இத்தன டார்ச்சர் பண்ணி அனுபவிக்க போற!
தண்ணிய போட்டு ப்ளேட போட்டு, அறுத்து காதுல ரத்தம் வர வச்ச!! 

அட பாவி பயல!!சமைக்கிறேன்னு சொன்ன, தெரு நாய் பூனைகள கொன்ன!!, அட நாடோடி பயல!!
நீ பண்ண இம்சை ல என் நண்பன் ரமேஷ தற்கொலைக்கு தூண்டுன!!! அட கருமம் புடிச்சவன!, அட நாதாரி பயல உன்னால வர போவுது உணவு பஞ்சமே!!
என்னடா சந்திரா என்ன பண்ண போற!!?.

அட ஞான சூனியமே, Ramesh Pawara Athletenu சொன்ன சொறி புடிச்சவனே!! 50km/h la through பண்ணிட்டு 160km/h Bowlingnu சொன்ன வணங்காமுடி பயலே!!

அட சூனியம் புடிச்சவனே , என்னையும் கொன்ன, தமிழ் உலக மாநாடு சொல்லி, அட பாவி பயல எப்ப நீ திருந்துவ?!!

Tuesday, 12 May 2009


என் நண்பர்கள் குழுமப்புகைபடம்.
From left to right, my seniors - Ebhi, Hari, my friend Chandra, again senior Sudar, and then myslef, again senior Jaya and finally senior Kamal.

"குசும்பின் உச்ச நட்ச்சத்திரங்கள்"


முதலில் மேல்கண்ட இப்படம் உங்கள் பார்வைக்கு!.

நண்பன் ஒருவன் வாயிலாக ஒரு படம் கிடைத்தது. அது பொதுவாக , எதிர்மறையான எண்ணங்களை தூண்டினாலும், எனக்கு சற்று வேறு வகையான கருத்துகளை சிந்திக்க தூண்டியது!.

என் இன மூத்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்பட செயலாளர்கள். என் கருத்துகள் இதோ, என்றும் மறையா ரசிப்புத்தன்மை - அற்ப வயது ஒரு தடையல்ல. வரம்பு மீராமை - தங்கள் ரசிப்புத்தன்மையை வெளியிடுவதில் எத்துனை ஒரு ஒழுக்கம். ஆபாசம் இல்லா அந்த புகைப்படம் , துளி அளவு வரம்பு மீரா கருத்தாண்மை. அதில் புன்னகை ராணி, இதை விட பெண்மைக்கு உயர்ந்த சொல் உண்டோ!! அச்சமின்மை - அட அடா!!!, தங்கள் புகைப்படத்துடன், கல்வி தகுதியுடன் ஒரு அறிமுகம்!! பெர்சுக பெர்சுகதான்!!!. குசும்பின் உச்சம் - இப்படத்தின் பிறப்பு ஒரு பொதுவான இடம். மொத்தத்தில் இவர்களுக்கு நான் கொடுக்கும் பட்டம், குசும்பின் உச்ச நட்ச்சத்திரங்கள்!! இது என் தனிப்பட்ட கருத்து , வாசிப்போர்கள் சற்று மன்னிக்கவும்!!!

பன்றிக்கு காய்ச்சல், மனிதநேயத்துக்கும் காய்ச்சல்!

ஆராய்ச்சிகளை செய்கிறான், கோடிகளை கொட்டுகிறான். மனிதனுக்கு காய்ச்சலாம், மனிதனை விடுத்து காரணிக்கிருமிகளை அழிக்கிறான். குழிகளை வெட்டுகிறான், தெருக்கோடியிலே கொட்டுகிறான். பன்றிக்கு காய்ச்சலாம் , காரணிக்கிருமிகளை விடுத்து பன்றிகளை அழிக்கிறான். எல்லா உயிர்களும் சமம் தானே?, மனிதநேயம் எங்கே?, ஒஹ்!!, அவையெல்லாம் வெறும் ஏட்டில் தானோ!!..

Sunday, 10 May 2009

"இப்படி செய்தால்"



சுயநலம் பித்துபிடித்த 
மக்களுக்கு இப்படி சொன்னால், எண்ணம் ஈடேருமோ!! 
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், வீட்டுமக்கள் வளம் காப்போம்!!

Friday, 8 May 2009

"எனை மாற்றிய தோழமை"

அறிமுக போராட்டம் இளங்கலை பொறியியல் மூன்றாமாண்டு, தோழர்கள் ( அப்பொழுது எனக்கு தோழிகள் இல்லை ! ) அனைவரும் பெற்ற வேலைவாய்ப்பின் பெருமிதத்தாலும், பெறப்போகும் வேலை முனைப்பிலும் மூழ்கிய நேரமது. நெருங்கிய ஒரு தோழன் வழியாக நான் அறிந்த முதல் பெண்மை; பிற்காலத்தில என் அறியாமை இரவுகளின் வெண்மை. அக்காலத்தில் என்னுள் பெண்மைப்பற்றிய உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் , குறிப்பிடும் படியான அபிப்பிராயம் இருந்ததில்லை. அதன் விளைவு, நான் பெற்ற அந்த அறிமுகத்தை மெருகூட்ட தவறினேன். அனால் அப்பெண்மை தவறவில்லை போலும்!. என்னால் முடிந்தது, மின்னஞ்சல் வழியாக இந்த இளங்கலை நட்பை சிதையாமல் காத்துகொண்டது. ஒப்பந்தங்கள் நான் முதுகலைப்பயில வெளிநாடு செல்லும் முனைப்பில் இருந்தபோது , அப்பெண்மையின் நட்பு நான் அறியா எனை ஆட்கொண்டதில் ஆச்சர்யமில்லை!. சிறு சிறு கைப்பேசி குறு செய்திகளினாலும் கைப்பேசி அலைப்புகளினாலும் அப்பெண்மை எனை செதுக்க ஆரம்பித்ததை நான் அப்பொழுது உணரவில்லை. அதுவரை பெண்மையின் சிந்தனைகளுக்கு செவி தராதவன் , பிறகு மெல்ல இசைந்ததை நான் உணர்ந்தேன். எனக்குள்; எனைசூழ்ந்த பெண்மையைப்பற்றிய பிற்போக்கான எண்ணங்களை அப்புரபடுத்திய அப்பெண்மையின் முனைப்பை நான் என்பால் அவள் கொண்ட முதல் ஒப்பந்தம் என்பேன். வெறும் பயனற்ற பொழுதுபோக்கு சாரத்தை மட்டும் கொண்டதில்லை எங்கள் தோழமை பேச்சு, மாறாக எதிர்கால முன்னேற்றத்தை பற்றியும், எங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், அதிகமாக வாழ்கைக்கல்வியைப்பபற்றியும் இருக்கும். ஒரு பெண்மையிடம் கலந்துரையாட வேண்டிய பெருமைதகுந்த நாகரீகத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்த அந்த பெண்மையின் ஆதங்கத்தை நான் என்பால் அவள் கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் என்பேன். சொல்லபோனால், அப்பெண்மையின் நட்பை நான் அறிந்ததேன்னமோ இந்த ஜெர்மானிய மண்ணில் தான். அவ்வளவு சக்தி போல இம்மண்ணுக்கு!. என்னுடைய முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு செயல்களிலும் அவளின் சிந்தனைகள் எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்திருக்கும். நான் தடமாறிய போது அங்கே தடைகற்களாக இருக்கு பெண்மை , நான் சரியான வழியில் செல்லும் போது ஊக்கமளித்து பயண வேகத்தை கூட்டியதும் இப்பெண்மைதான். அத்தகைய மாற்றத்தை ஒரு பெண்மை என்னுள் ஏற்படுத்திய சாதுரியத்தை கண்டு நான் அதனை ஒப்பந்தம் என்றழைப்பது சரியே!. எனக்கு கிடைத்த இத்தகைய தோழமை, என் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் அவர்களை ஒரு நல்ல பெண்மையை தோழமையாக்க அறிவுருத்துவதுண்டு. என்னடா, இந்த நட்பு!, ஒரு சுவாரஷ்யம் இல்லை, ஒரு கலாட்டா இல்லை என் நீங்கள் எண்ணலாம். எங்கள் பேச்சை ஒட்டுகேட்டால் நீங்கள் ஒரு முழு நீல நகைச்சுவை திரைப்படமே எடுக்கலாம். என் தோழியின் நகைச்சுவை உணர்வை அளக்க அளவுகோலே இல்லை என்பேன். என் உள்ளார்ந்த மாற்றத்தை தவிர, என் போக்கிரித்தனமான நடை, உடை, பாவனைகளை மாற்றியதில் அவளுக்கும் பங்குண்டு. தன்னுடைய கைதேர்ந்த கலையால், என் வெளியார்ந்த மாற்றத்திற்கு வித்திட்டவளே அவள் தான். என் தோல்விகளே, என் வெற்றிகள் எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும்; அது கைபேசி மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, இல்லை நேரிலோ, அப்பெண்மையை வெறுப்பேத்த முயற்சி செய்து வெற்றிபெறுவதுண்டு. ஆனால் முடிவில் தோல்வி என்னமோ எனக்குதான். நான் பலமுறை என் நட்பை முறித்திக்கொள்ள முயற்சி செய்து பெற்ற தோல்விகளே என் வாழ்கையின் பல வெற்றிகளுக்கு காரணம். என் ஒவ்வொரு முயற்சியிம் போதும், இப்பெண்மையின் பங்களிப்பு என்னவோ " உனக்கு வேண்டுமானால் என் நட்பு தேவையில்லாமல் போகலாம், ஆனால் எனக்கு வேண்டும் " இதுவாகத்தான் இருக்கும். கடவுளின் படைப்பின் பெருமை இந்த பெண்மை போலும்!. இன்று மென்பொருள் சேவையில் முக்கிய பங்களிப்பில் இருக்கும் என் தோழியின் ஆண்மை ஆளுமை கண்டு நான் மிரண்டு போனதுண்டு. அவளிடம் நான் காத்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அவளுடைய வெற்றியாகட்டும் , தொல்வியாகட்டும் என்னிடம் பகிர்ந்துகொள்ள அவள் தவறியதில்லை. அந்த பங்களிப்பின் முடிவில், நான் கற்றுகொள்வது அவளின் அனுபவப்பாடங்கள். சொல்லபோனால், என்னுள், என்னால் இயலாத மாற்றத்தை அவள் செய்கிறாள். இத்தகைய பெண்மையை நான் என்னவென்று சொல்வது. இன்னொரு தோழன் விரைவில் திருமதியாக காத்திருக்கும் என் தோழி சொல்கிறாள், திருமணத்திற்கு பிறகு அவள் கணவன் என் தோழனாம். இதை எங்கள் ஒவ்வொரு கலந்துரையாடல் முடிவில் அவள் கூற தவறியதில்லை. எனக்கு சிறு வயதில் பாரதி பாடிய பாடல் ஞாபகம் வருகிறது " என்ன தவம் செய்தேன் இப்பெண்மையை என் தோழியாக பெற! " . ஒரு ஆண் முழுமை அடைவது என்பது ஒரு பெண்ணால் சுலபமாக முடியும். அப்பெண் தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், ஏன், சகோதரியாக கூட இருக்கலாம். நான் அதிர்ஷ்டசாலி , இவையெல்லாம் பெற்றும் , இதற்கும் மேலாக இக்கட்டுரையின் நாயகி ஒரு பெண்மையை என் தோழியாக பெற்றேன்!. வடிவேலு சொல்வது போல " நீ நல்லா இருமா!". இதை தவிர வேற சொல்ல எனக்கு தெரியவில்லை!!.

"என் முதல் பதிவு"

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கோடைமலை. கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம். பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ். தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம். சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம். விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி. என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சோற்று உணவு. நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம். இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்தது - என் முதல் காதல். அத்துணை படபடப்பை தந்தது - என் முதல் பதிவு!!!

Top Tamil Blogs by Tamilers